Wednesday, 15 February 2012

காற்றில் ஒடிந்த தளிர்கள்

அந்த தரிசில் கூட கொஞ்சம் ஈரம் இருந்தது

புழுதிமூடிய பூமிக்கடியில் புகுந்து தேடி, நீரைஉறிஞ்சி

வளரும் மரங்கள் அங்கே வேர்விட்டிருந்தன

தரிசில் தெரிந்த பசுமை

காற்றின் கண்களை குத்தியிருக்கவேண்டும்

மெல்ல மெல்ல தரிசின் மீது வீச தொடங்கியது

தன் பெருநிலத்தின் களைகளின் விதைகளை

தரிசின் நாணல்களிடையே தூவிப்போனது


களைகள் மரங்களின் வேர்களை அரித்தன.

“வந்து விழுந்த விதைகள் நீங்கள்”

மரங்களின் வரலாற்றை மாற்றி எழுதியது காற்று.


இப்போ காற்றின் வேகம் கூடத்தொடங்கியது.

கிளைகள் ஒடிந்து மண்ணில் வீழ்ந்தன.

சில கடலை கடந்து புது மண்ணில் விழுந்தன.

அங்கே வேர்களை தொலைத்து புது செடிகளாயின.

சில மரங்கள் மட்டும் பனையாய் நின்றன.

தழும்புகள் சுமந்து வளையாதிருந்தன.

காற்றின் வேகம் கூடக்கூட -அவை

புது தளிர்களை தம்மோடு சேர்த்துக்கொண்டன.

கொடுக்க மறுத்த செடிகளின் இலைகளை பிரித்து

தளிர்களை தாமே பறித்துக்கொண்டன.

காற்று ஒடித்த கிளைகளும் இன்றி,

மரங்கள் பிடுங்கிய தளிர்களுமின்றி

மொட்டை செடிகள் மண்ணில் வீழ்ந்தன.

நாணல் புதரின் சலசலப்பில்,

அவற்றின் ஈனக்குரல்கள் ஒடுங்கிப்போயின.


முதிர்ந்த நாணல்கள் காற்றிற்கு வளைந்து,
பல திசைகளில் நிற்க,

இலைகள் உதிர்ந்து, கிளைகள் ஒடிந்து நலிந்த மரங்களால்
தளிர்களின்
கரங்களில் திணிக்கப்பட்டது காற்றை தடுக்கும் கடமை.

தாழ்ந்த நாணல்கள் தமக்குள்ள கிசுகிசுத்தன

"புயலடித்தால் என்ன செய்வது, தளிர்கள் நிமிர்ந்து தடுக்கவேண்டியதுதான்".


கடலை கடந்து வளரும் செடிகள்,

மரங்கள் நிற்க நெறிகள் சொல்லின.

தங்களை அணைத்த சோலைகள் வந்து

காற்றின் கைகளை கட்டும் என்றன.

செடிகள் போட்ட கூக்குரலால்

சோலைகள் கொஞ்சம் சத்தம் போட்டன.

காற்றின் காதுகள் மூடியிருந்தன.

கனவுகள் மெல்ல கரைந்து போயின.

நேற்று புயற்காற்றில் தளிர் ஒடிந்து வீழ்ந்தது,
வேரோடு சரிந்து கிடந்த விருட்சத்தின் அருகில்

சருகாகி மண்ணில் தொலைந்து போனது


புயல் ஓய்ந்ததும் நாணல்கள் மீண்டும் தலை தூக்கின,

விழுந்த தளிரை மூடி வளர்ந்தன,

கடலுக்கப்பால் செடிகள் கூடின.

மரங்கள் இன்னும் இருக்கா இல்லையா,

அவை மாலை தென்றலில் சலசலத்தன.

செடியின் வாசம் தொலைத்து புதிதாய்

புது தளிர்கள் அங்கே துளிர்க்க தொடங்கின.

.
"
என்ன இந்த வெளியில் செடிகள் நலமா?"
என கேட்கும் தூரத்து பூஞ்சோலைகளிடம் குழைந்து தவழ்ந்து,

அவை உதிர்த்துவிட்ட மகரந்தமணிகளை அள்ளி,

அதில் கொஞ்சம் வளைந்த நாணல்கள் நிறைந்த தரிசில் தூவி,

இனி இங்கெல்லாம் பூக்கள்தான் என்று உலகுக்கு முரசறைகிறது

காற்று.

பொறுக்கி வந்த மகரந்தங்கள் கருக்கட்டியிருக்கிறதா

என பக்கத்து சோலை பறவைகள் வந்து பார்த்துப்போகும்.

அவை தரிசில் விளையும் கனிகளுக்காய் காத்திருக்கக்கூடும்.

காற்று கொண்டுவரும் மகரந்த மழையில்
நாணல்கள் குளிக்கும்.

இங்கே நாணல்கள் மட்டுமே இருக்கலாம் -என்று

காற்று வீசிக்கொண்டே இருக்கிறது

-மானுடன்-

Saturday, 6 September 2008

நகர வாழ்வு

கொட்டும் மழை
குழாயில் நீரில்லை


நிலாக்காலம்

நிலவில் நனைகையில்
புரிவதில்லை
அமாவாசையின் நிச்சயம்


Thursday, 4 September 2008

முற்றத்து சருகுகள்

முற்றத்து சருகுகளை கூட்டியபோது நினைக்கவில்லை
நான் முற்றமில்லா வீடுகளில் முடங்கிப்போவேன் என.